அம்மா இருசக்கர வாகனம் வேண்டி பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்


அம்மா இருசக்கர வாகனம் வேண்டி பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 23 Sept 2019 4:15 AM IST (Updated: 23 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

அம்மா இரு சக்கர வாகனம் வேண்டி பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

உழைக்கும் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 50 சதவீத மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முற்றிலும் பெண்களுக்கான திட்டமாகும். இதில் வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் ஆகியவற்றில் எது குறைவோ அந்த தொகை அரசு மூலம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் ஸ்கூட்டரை வாங்க தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அல்லது தவறியவராக இருக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சிறு தொழில் செய்பவராக இருக்கலாம்.

தொலைதூரம், மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள், பெண்களை குடும்ப தலைவராக கொண்டவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை கடந்த திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 1-1-2018 தேதி பிறகு தயார் செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே திட்டம் பொருந்தும்.

எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த உழைக்கும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் வேண்டி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story