தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் போஷன் அபியான் ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
போஷன் அபியான் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில், செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. வயிற்றுப்போக்கு, ரத்த சோகை ஆகியவற்றில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக வழங்கப்படும் உணவு பொருட்கள் குறித்தும் அதிக சத்து நிறைந்த காய்கறிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே போஷன் அபியான் திட்டம் குறித்து பேச்சு, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு ரங்கோலி கோலங்கள், கலை நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story