நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் பலமான பின்னணி - முத்தரசன் பேட்டி


நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் பலமான பின்னணி - முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 23 Sept 2019 4:00 AM IST (Updated: 23 Sept 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

நீட்தேர்வு ஆள்மாறாட்டத்தில் பலமான பின்னணி உள்ளதாக முத்தரசன் சந்தேகம் எழுப்பி உள்ளார்.

சிவகங்கை, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கட்சியின் மாநில சிறப்பு மாநாடு சிவகங்கையில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் அகில இந்திய பொது செயலாளர் ராஜா மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய அரசியல் சூழ் நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மத்தியில் பா.ஜனதா அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வேலை வாய்ப்பு இல்லாமல் ஆயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்வரும் அறிவிப்புகள் நாட்டை சீரழிக்கும் வகையில் உள்ளது. எனவே இவைகளை அரசியல் ரீதியாக எதிர் கொள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியை வலுப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் தற்போது உள்ள ஆட்சி, பா.ஜனதா அறிவிப்புகளை வழிமொழியும் ஆட்சியாக உள்ளது.

தமிழகத்தில் தற்போது விக்ரவாண்டி மற்றும் நாங்குனேரி சட்டசபைகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த 2 தொகுதி வாக்காளர்களும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும். நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசு வேண்டும் என்றே நம்மை பழிவாங்கும் போக்கில் செயல்படுகிறது.

பொதுவாக நீட்தேர்வு எழுதுபவர்களை கடுமையான சோதனைக்கு பின்பு தான் அனுமதிக்கின்றனர். அப்படிபட்ட நிலையில் ஆள்மாறாட்டம் செய்வது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. எனவே பலமான பின்னணி உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில உதவி செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் கண்ணகி, நகர் செயலாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story