சிங்கம்புணரி பள்ளியில் புதிய முறையில் மரக்கன்றுகளை நட்ட துணை கலெக்டர்


சிங்கம்புணரி பள்ளியில் புதிய முறையில் மரக்கன்றுகளை நட்ட துணை கலெக்டர்
x
தினத்தந்தி 23 Sept 2019 4:00 AM IST (Updated: 23 Sept 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அரசு பள்ளியில் புதிய முறையில் மரக்கன்றுகளை நடும் முறை குறித்து துணை கலெக்டர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. பயிற்சி துணை கலெக்டர் முருகேசன் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பள்ளி மாணவர்கள், தேசிய பசுமை படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை கலெக்டர் புதிய முறையில் மரக்கன்றுகளை நட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது அவர் கூறும் போது, சுமார் 1½ அடி அகலம் நீளம் மற்றும் ஆழம் கொண்ட குழியில் நான்கு மூலைகளிலும் சுமார் 4 அங்குலம் அகலம், சுமார் 1½ அடி உயரம் கொண்ட பைப்புகளை வைத்து, அதில் குப்பைகள் மற்றும் உரங்கள் கலந்த பொருட்களை குறிப்பிட்ட அளவிற்கு போட்டு வைக்க வேண்டும். பின்பு பள்ளத்தின் மையப்பகுதியில் மரக்கன்றுகளை வைத்து மண்ணை போட்டு மூட வேண்டும்.

இவ்வாறு செய்தால் மண் மற்றும் உரங்களால் மரக்கன்றுகள் வேர் விடும் போது, அந்த வேர் நான்கு மூலைகளுக்கும் செல்லும் போது, அதில் நீர் ஈர்ப்பு சக்தி உருவாகிறது. இதனால் மழையில்லாத காலங்களிலும், மரக்கன்றுகளுக்கு உரம் மற்றும் மணலில் உள்ள ஈரப்பதத்தால் ஊக்கம் கொடுக்கப்படுகிறது. இதனால் மரக்கன்றுகள் விரைவாக தெளிச்சியுடன் நன்கு வளரும் என்றார்.

வித்தியாசமான முறையில் மரக்கன்றுகளை நட அறிவுரை வழங்கிய துணை கலெக்டரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர். நிகழ்ச்சியில் தாசில்தார் பஞ்சவர்ணம் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், துணை மேற்பார்வையாளர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story