இந்தி எதிர்ப்பு என்று தமிழக மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு


இந்தி எதிர்ப்பு என்று தமிழக மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு
x
தினத்தந்தி 22 Sep 2019 11:15 PM GMT (Updated: 22 Sep 2019 10:32 PM GMT)

இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சியில் மதுரைமேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட புதியஅங்கன்வாடி மையம் உள்ளிட்ட புதிய கட்டிடங்கள் திறப்புவிழா நடந்தது. விழாவிற்கு அமைச்சர் செல்லூர்ராஜூ தலைமை தாங்கி புதிய கட்டிடங்களை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மதுரை மேற்கு சட்டமன்றதொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.

போராட்டம், போராட்டம் என்று அழைப்பு விடுக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு சென்று வந்த பின் திடீரென ஞானோதயம் பெற்றது ஏன்?, திடீர் என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றதற்கான காரணம் என்ன?

அதன் மர்மம் என்னவென்றால் 2ஜி வழக்கு, கலைஞர் டி.வி. ஊழல் போன்ற வழக்கில் சிக்கிய தங்கை கனிமொழியை போல தானும் சிறை செல்ல நேரிடும் என்ற பயத்தினால் ஸ்டாலின், கவர்னரை சந்தித்த பின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பின் வாங்கி கைவிட்டுவிட்டார். கைதுக்கு பயந்து தமிழக மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். 2021-ல் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட வராது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் பரவை ராஜா, பாண்டியன்கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பாண்டியன், முன்னாள் மேயர் திரவியம், முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாதுரை, முன்னாள் கவுன்சிலர் சவுந்தரபாண்டியன் உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் தனபால் நன்றி கூறினார்.

Next Story