நடிகர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


நடிகர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 23 Sept 2019 4:30 AM IST (Updated: 23 Sept 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

நடிகர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அது அவர்களின் விளம்பரத்திற்காக கூட இருக்கலாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

திருமங்கலம், 

திருமங்கலத்தில் ஜெயலலிதா பேரவை, அம்மா சேரிடபிள் டிரஸ்டு சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தமிழ்நாடு பாரம்பரியம் கலை பண்பாடு ஆகியவற்றிற்கான போட்டி நடந்தது. இந்த போட்டியில் 12 கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோலாட்டம், கும்மியாட்டம், முளைப்பாரி வளர்த்தல் என போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதவாது:- இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டுவர மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு திட்டத்தை உருவாக்கி முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். விவசாயம், மின்சாரம், பள்ளிகல்வி, உயர்கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் அ.தி.மு.க. அரசு சரித்திர சாதனை செய்து வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மையில் புதிய புரட்சியை உருவாக்கி உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் உள்ளாட்சி பொதுப்பணித்துறைக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்து ஏரி, குளம், கண்மாய்கள் தூர்வாரப்பட்டன. தற்போது ஆன்லைன் மூலம் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் விண்ணப்பித்து பெறமுடியும். இந்தியாவின் தொழில் வளர்ச்சி 6 சதவீதம். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது.

ஜனநாயக நாட்டில் கருத்து சொல்பவர்கள் சுயநலமாக சிந்திக்காமல் பொதுநலத்துடன் சிந்தித்து கருத்து சொல்ல வேண்டும். நடிகர்கள் சொல்லும் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அது விளம்பரத்திற்கு கூட இருக்கலாம். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறும். உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். இதற்கு கட்சியில் உள்ள 1.5 கோடி தொண்டர்களும் பாடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமினை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதில் கலந்துகொண்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு பரிசுப்பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன், சேரிடபிள் டிரஸ்டு செயலாளர் பிரியதர்ஷினி, புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், திருமங்கலம் நகர் செயலாளர் விஜயன், ஒன்றியசெயலாளர்கள்அன்பழகன், மகாலிங்கம், வேளாண்மை விவசாய கூட்டுறவு சங்கத் தலைவர் ஆண்டிச்சாமி, சாமிநாதன், சுகுமார், கோடீஸ்வரன், செல்வம், கபிகாசி, கப்பலூர் சிட்கோ தலைவர் ரகுநாதராசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story