கார்கள் நேருக்கு நேர் மோதல்: ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் நசுங்கி சாவு - சித்ரதுர்கா அருகே விபத்து


கார்கள் நேருக்கு நேர் மோதல்:  ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் நசுங்கி சாவு - சித்ரதுர்கா அருகே விபத்து
x
தினத்தந்தி 22 Sep 2019 11:28 PM GMT (Updated: 22 Sep 2019 11:28 PM GMT)

சித்ரதுர்கா அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் நசுங்கி இறந்தனர்.

சிக்கமகளூரு,

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா கல்கெரே கிராமம் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த சாலையில் எதிரே இன்னொரு கார் வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 கார்களும் உருக்குலைந்தன.

இந்த விபத்தில் ஒரு காரில் வந்த 3 பேரும், இன்னொரு கார் டிரைவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு காரில் வந்த 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்த ஸ்ரீராமபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 6 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஒசதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மதன்(வயது 35), மதன்சிங்(40), கவுதம்சிங்(38), சித்ரதுர்காவை சேர்ந்த கார் டிரைவர் லோகேஷ்(40) என்பது தெரியவந்தது. ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் தொழில் விஷயமாக ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவுக்கு காரில் சென்றதும் தெரிந்தது. இதன்பின்னர் 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஸ்ரீராமபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story