நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு


நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 23 Sept 2019 9:54 PM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் 4 ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை,

சென்னை மாநகர பகுதிக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 20-ந்தேதியில் இருந்து தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் மூலம் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

குறிப்பாக கடந்த 19-ந்தேதி வரை பூண்டி ஏரியில் 15 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. மழை பெய்ய தொடங்கியதும், 20-ந்தேதி 4 ஏரிகளிலும் சேர்த்து 258 மில்லியன் கன அடி மழை தண்ணீர் கிடைத்துள்ளது. தொடர்ந்து அதேபோல் தொடர்ந்து பெய்த மழையால் 21-ந்தேதி 108 மில்லியன் கன அடி தண்ணீர் வரப்பெற்று, ஏரிகளின் மொத்த இருப்பு 366 மில்லியன் கன அடியாக உயர்ந்தது.

அதேபோல் 22-ந்தேதி 38 மில்லியன் கன அடி தண்ணீர் கிடைக்கப்பெற்றதன் மூலம் ஏரிகளின் மொத்த இருப்பு 404 மில்லியன் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து 23-ந்தேதி இரவு பெய்த மழையால் 22 மில்லியன் கன அடி தண்ணீர் கிடைக்கப்பெற்ற நிலையில், நேற்றைய நிலவரப்படி 4 ஏரிகளின் நீர் இருப்பு 426 மில்லியன் கன அடியாக இருந்தது.

வறண்டு கிடந்த ஏரிகளில் மழை காரணமாக தண்ணீர் வரப்பெற்றதன் மூலம் மாநகர பகுதிக்கு குடிநீர் தேவைக்காக ஏரிகளில் இருந்து 3 முதல் 8 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் 10 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 18 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 3 மி.மீ., கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் மூலம் பூண்டி ஏரிக்கு வரும் நுழைவு பகுதியில் 3 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 2 மி.மீ., தாமரைப்பாக்கத்தில் 49 மி.மீ., என்ற அளவில் பரவலாக மழை பெய்துள்ளது. புழல் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்து உள்ளது.

இதன் மூலம் பூண்டி ஏரிக்கு 182 கன அடியும், புழல் ஏரிக்கு 26 கன அடி, சோழவரம் ஏரிக்கு 35 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 20 கன அடி வீதமும் தண்ணீர் வந்து உள்ளது. மாநகர குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 8 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 3 கன அடிவீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளிலும் 938 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது 426 கன அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் வறண்டு கிடந்த 4 ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. தொடர்ந்து மழையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் என்று பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story