சோலார் கருவிகள் மூலம் தினமும் 2,400 யூனிட் மின்சாரம்: சென்டிரல் ரெயில் நிலையத்தின் பகல் நேர மின்சார தேவை பூர்த்தியாகிறது அதிகாரிகள் தகவல்


சோலார் கருவிகள் மூலம் தினமும் 2,400 யூனிட் மின்சாரம்: சென்டிரல் ரெயில் நிலையத்தின் பகல் நேர மின்சார தேவை பூர்த்தியாகிறது அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 24 Sept 2019 4:30 AM IST (Updated: 23 Sept 2019 10:07 PM IST)
t-max-icont-min-icon

சோலார் கருவிகள் மூலம் தினமும் 2,400 யூனிட் மின்சாரம் கிடைப்பதால், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் பகல் நேர மின்சார தேவை பூர்த்தியாகிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் போக்குவரத்து முனையமாக இருந்து வருவது சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம். இங்கு பல்வேறு பசுமை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் சென்டிரல் ரெயில் நிலையத்தின் மேற்கூரையில் 600 கிலோ வாட் அளவுக்கு சோலார் கருவிகள் பொருத்தப்பட்டு, அதில் இருந்து தினமும் 2000 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்த ரெயில் நிலையத்தின் பகல்நேர மின்சார தேவை முழுவதுமாக நிவர்த்தி செய்யப்படுகிறது.

மேலும் குடிநீர் மறு சுழற்சி, சோலார் மின்உற்பத்தி, கழிவுநீர் மேம்பாட்டு மையம், மழைநீர் சேமிப்பு, பயணிகளுக்கான ஓய்வு அறைகள், உணவகங்கள், வைபை வசதி, எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதில் தெற்கு ரெயில்வே கவனம் செலுத்தி வருகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம், தண்ணீர் மறுசுழற்சி, சோலார் மின்சார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கு சமீபத்தில் பசுமை தொழிற் கட்டிட கூட்டமைப்பின் சான்றிதழைப் பெற்றது. இந்நிலையில் இந்த ரெயில் நிலையத்தில் மேலும் பல பசுமைத் திட்டங்களை கொண்டு வந்து தொடர்ந்து செயல்படுத்த உள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்காக கழிப்பறை அமைப்பது, வாய்ப்புள்ள இடங்களில் கூடுதலாக மரக்கன்றுகள் நடுதல், புதிய எல்இடி விளக்குகள் பொருத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் மேற்கூரையில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்போடு சுமார் 600 கிலோ வாட் அளவுக்கு சோலார் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் தினமும் கிடைக்கும் 2,400 யூனிட் மின்சாரம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் பகல் நேர மின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய உதவுகிறது. வெளிச்சந்தையில் யூனிட்டுக்கு ரூ.8 என்றால், இங்கு நாங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.3.24க்கு பெறுகிறோம். இதனால், மின்கட்டண செலவு 60 சதவீதம் வரை குறைவதோடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story