பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது; 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு


பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது; 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 24 Sept 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் புதிய ரெயில்வே பாலத்தின் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. 2 ஆண்டுகளில் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. அது மிகவும் பழமையான பாலமாக இருப்பதால் பாம்பன் கடலில் புதிதாக ரெயில்வே பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது. பாம்பன் கடலில் ரூ.250 கோடியில் கட்டப்பட உள்ள புதிய ரெயில்வே பாலத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்று என்ஜினீயர்கள் குழுவினர் நவீன கருவி மூலம் புதிய ரெயில்வே பாலம் அமைய உள்ள கடல் பாதை, இடம் மற்றும் தற்போதுள்ள பாலத்தின் வடிவமைப்புகளை சர்வே செய்து பதிவு செய்துகொண்டனர்.

இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் ரெயில்வே துறையோடு சேர்ந்த ரெயில் விகாஷ்நிகாம் லிமிடெட் மூலம் கட்டப்பட உள்ளது. தற்போதுள்ள பாலம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. அந்த பாலம் 145 தூண்களை கொண்டு, கடலில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

பாம்பன் கடலில் புதிய பாலமானது தற்போதுள்ள பாலத்தில் இருந்து வடக்கு பகுதியில் 50 மீட்டர் தூரத்தில் கட்டப்பட உள்ளது. சுமார் 100 தூண்களை கொண்டு 8 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது. புதிய பாலத்தின் மையப் பகுதியில் அமைக்கப்படும் தூக்குப்பாலம் மின் மோட்டார் மற்றும் ஹைட்ராலிக் முறையில் திறந்து மூடும் வகையில் அமைய இருக்கிறது.

ஒரே இணைப்பாக மேல் நோக்கி சென்று அந்த பாலம் திறக்கும். கப்பல் சென்றவுடன் மீண்டும் கீழ் நோக்கி வரும் வகையில் தூக்குப்பாலம் கட்டப்படும். தூக்குப்பாலத்தில் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் மின்விளக்கு வசதி செய்யப்படும். தூக்குப்பாலத்தின் மையப் பகுதியில் அதை இயக்குபவர் தங்கியிருந்து பணிபுரிய வசதியாக தகவல் தொடர்பு வசதியுடன் கூடிய அறை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) புதிய ரெயில்வே பாலத்திற்கான பணி தொடங்கப்பட உள்ளது. பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள பாலத்தில் அனைத்து ரெயில்களுமே குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருவதால் ஒரு ரெயில் பாலத்தை முழுமையாக கடந்து செல்ல 15 முதல் 18 நிமிடம் வரை ஆகிறது. ஆனால் புதிய பாலம் கட்டி முடிக்கப்படும்பட்சத்தில் பாலத்தில் அனைத்து ரெயில்களும் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். இதனால் பாலத்தை ரெயில்கள் கடந்து செல்லும் நேரம் பாதியாக குறையும். புதிய பாலம் கட்டி முடிக்கும்வரை தற்போதுள்ள பாலத்தில் வழக்கம்போல் ரெயில் போக்குவரத்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story