மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி கலந்துகொண்டார்: மகன் சிறையில் இருந்ததால் சட்டப்படிப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்ற தந்தை ராமநாதபுரம் கல்லூரியில் இடம் கிடைத்தது


மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி கலந்துகொண்டார்: மகன் சிறையில் இருந்ததால் சட்டப்படிப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்ற தந்தை ராமநாதபுரம் கல்லூரியில் இடம் கிடைத்தது
x
தினத்தந்தி 23 Sep 2019 10:45 PM GMT (Updated: 23 Sep 2019 7:02 PM GMT)

மகன் சிறையில் இருந்ததால் அவரது சார்பில் அவருடைய தந்தை சென்னையில் நடந்த சட்டப்படிப்புக்கான கவுன்சிலிங்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி கலந்துகொண்டார். அந்த வாலிபருக்கு ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

மதுரை,

திருச்சியை சேர்ந்தவர் கணேசன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது மகன் கார்த்திகேயன் (வயது 25), பட்டப்படிப்பு முடித்துள்ளார். பின்னர் வெளிநாட்டுக்கு சென்று சில வருடங்கள் வேலை செய்தார். தற்போது சொந்த ஊருக்கு வந்த அவர், சட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதற்காக சமீபத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கிடையே தனது நண்பர்கள் சிலருடன் நெல்லைக்கு சென்றுவிட்டு காரில் திரும்பினார்.

அப்போது மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் இவர் களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த எனது மகன் கடந்த 17-ந்தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார். தற்போது அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் எனது மகன் 3 ஆண்டு சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அவர் சிறையில் உள்ளதால், அவருக்காக நான் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

சட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நேற்று நடந்ததால், இந்த மனு உடனடியாக விசாரணைக்கு ஏற்கப்பட்டு நேற்று மதியம் நீதிபதி எம்.சுந்தர் முன்பு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் சென்னையில் இருந்ததால், அவரது சார்பில் வக்கீல்கள் பிரபு ராஜதுரை, ராபர்ட் சந்திரசேகர் ஆஜரானார்.

அப்போது அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல், “வழக்கமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்களுக்காக மட்டுமே அவர்களின் உறவினர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்“ என்று தெரிவித்தார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே மாணவர்களின் உறவினர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று வரையறுக்கப்படவில்லை. எனவே மனுதாரரை, தனது மகன் சார்பில் சட்டப்படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து பிற்பகலில் சென்னையில் நடந்த சட்டப்படிப்புக்கான கலந்தாய்வில் கணேசன் பங்கேற்றார். கணேசனின் மகனுக்கு ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் படிக்க இடம் ஒதுக்கப்பட்டதாக மதுரை ஐகோர்ட்டில் ஆஜரான அவரது வக்கீல் ராபர்ட் சந்திரசேகர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Next Story