சாலையை கடந்தபோது லாரி மோதியது: கண்முன்னே 7 வயது மகனை பறிகொடுத்த பேராசிரியை


சாலையை கடந்தபோது லாரி மோதியது: கண்முன்னே 7 வயது மகனை பறிகொடுத்த பேராசிரியை
x
தினத்தந்தி 24 Sept 2019 5:00 AM IST (Updated: 24 Sept 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே சாலையை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் டிப்பர் லாரி மோதி பலியானான். அவனுடைய தாயாரான பேராசிரியை கண்முன்னே இந்த சம்பவம் பரிதாப சம்பவம் நேர்ந்தது. சிறுவனின் உடலை எடுக்க விடாமல் அப்பகுதி மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாயல்குடி,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா தோப்புப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் அஸ்வந்த் (வயது 7). சாயல்குடியில் ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் குடும்பத்துடன் நரிப்பையூர் வெள்ளப்பட்டி பகுதியில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் கழித்து அஸ்வந்த் பிறந்ததால் செல்லப்பிள்ளையாக வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து குப்பையை கொட்டுவதற்காக கிருஷ்ணவேணியும், அவருடைய மகன் அஸ்வந்த்தும் வெளியே வந்தனர். அப்போது தாயின் கையில் இருந்த குப்பை வாளியை பறித்துக்கொண்டு சிறுவன் அஸ்வந்த் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து சென்று கொட்டிவிட்டு மீண்டும் சாலையை கடக்க முயன்றுள்ளான்.

அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து திருப்புல்லாணிக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது மோதியது. இதில் தாய் கண்முன்னே, சிறுவன் அஸ்வந்த் உடல் சிதறி பலியானான். இதையடுத்து லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

தன் கண் எதிரிலேயே மகன் அஸ்வந்த் பலியாகிக் கிடந்த காட்சியை கண்டு தாய் கிருஷ்ணவேணி கதறி அழுது கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். மேலும் தகவல் அறிந்ததும் தனியார் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஏராளமானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னீசியஸ், துணை சூப்பிரண்டுகள் மகேந்திரன், ராஜேஸ், மகேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிறுவனின் உடலை எடுக்கவிடாமல் பொதுமக்கள் தடுத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, “தப்பி ஓடிய லாரி டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். பலியான சிறுவனின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேரமாகியும் போராட்டத்தை கைவிடாததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் சாயல்குடி பஸ் நிலைய பகுதியில் பதுங்கி இருந்த லாரி டிரைவர் முருகலிங்கத்தை (26) போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கடலாடி அருகே உள்ள ஏ.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

இதையடுத்து மாலை 4 மணிஅளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த விபத்து தொடர்பாக சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகாபாய் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story