காரியாபட்டி அருகே 105 வயது மூதாட்டியை அரிவாள்மனையால் வெட்டி கொன்ற பேரன்; மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்


காரியாபட்டி அருகே 105 வயது மூதாட்டியை அரிவாள்மனையால் வெட்டி கொன்ற பேரன்; மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 24 Sep 2019 12:00 AM GMT (Updated: 23 Sep 2019 7:16 PM GMT)

காரியாபட்டி அருகே மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தனது 105 வயது பாட்டியை அரிவாள்மனையால் வெட்டி கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவருடைய மகன் பாலமுருகன்(வயது 27). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் மது மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வாராம். இந்தநிலையில் நேற்று பாலமுருகன் தனது பெற்றோரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர், மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறும், வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் பாலமுருகன் பணம் தராத ஆத்திரத்தில் வீட்டில் தகராறு செய்துவிட்டு வெளியே சென்றார்.

பின்னர் அவர் தனது 105 வயது பாட்டி கருப்பாயியிடம் சென்று பணம் கேட்டுள்ளார். அவரும், நீ குடிப்பதற்கு தான் பணம் கேட்பாய், உனக்கு பணம் தரமுடியாது, ஒழுங்காக வேலைக்கு செல் என கூறி பணம் தர மறுத்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பாலமுருகன் அருகில் கிடந்த அரிவாள்மனையை எடுத்து பாட்டி என்றும் பாராமல் கருப்பாயியியை வெட்டி கொலை செய்தார். பின்னர் பாட்டி காதில் அணிந்திருந்த தோடை அறுத்து எடுத்து கையில் வைத்துக்கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.

இதற்கிடையே பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர், கருப்பாயி கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக மல்லாங்கிணறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்துவிட்டு எதுவும் நடக்காதது போல் பாட்டியின் உடலின் அருகே அமர்ந்திருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

105 வயது மூதாட்டியை பேரனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story