விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தல்: தே.மு.தி.க. போட்டியிடுமா? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தல்: தே.மு.தி.க. போட்டியிடுமா? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 23 Sep 2019 11:15 PM GMT (Updated: 23 Sep 2019 7:39 PM GMT)

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுமா? என்பது குறித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பூரில் கருத்து தெரிவித்தார்.

திருப்பூர்,

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லிங்க்ஸ் சவுகத் அலி (வயது 72). உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்தார். அவர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர். பனியன் தொழில் அதிபர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று திருப்பூர் வந்து லிங்க்ஸ் சவுகத் அலியின் வீட்டுக்கு சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன், கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் பார்த்தசாரதி, அக்பர், திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஷ்வரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் பிலேமலா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

லிங்க்ஸ் சவுகத் அலி விஜயகாந்த்துக்கு ஆத்மார்த்தமான நண்பர். மிகவும் நல்ல மனிதர். அவருடைய இழப்பு குடும்பத்துக்கு மட்டுமில்லாமல் எங்கள் எல்லோருக்குமான இழப்பு. இந்த செய்தியை கேட்டதும் விஜயகாந்த் கண்கலங்கி திருப்பூர் வருவதாக தெரிவித்தார்.

காரில் திருப்பூர் வந்து லிங்க்ஸ் சவுகத் அலி குடும்பத்தினரை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறினார். தூர பயணத்தை தவிர்க்க நாங்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, நாங்கள் அவருடைய குடும்பத்தினரை சந்தித்து எங்களின் சார்பிலும், தே.மு.தி.க. சார்பிலும் ஆறுதல் தெரிவித்தோம் என்றார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுமா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கூறும்போது, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. ஏற்கனவே உள்ளது. இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சிகள் சேர்ந்து முடிவு எடுக்கும்.

தற்போது இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் வந்து விஜயகாந்த்தை சந்தித்து பேசுவார்கள். அவர்களுடன் கலந்துரையாடியபிறகு எங்களுடைய முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

Next Story