குஜிலியம்பாறை அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


குஜிலியம்பாறை அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2019 10:30 PM GMT (Updated: 23 Sep 2019 8:02 PM GMT)

குஜிலியம்பாறை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை அருகே உள்ள கோட்டாநத்தத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறு வறண்டுவிட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அப்பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோட்டாநத்தம், ஆதிதிராவிடர் காலனி, கவுண்டர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் இணைப்பை ஊராட்சி நிர்வாகத்தினர் திடீரென துண்டித்தனர். இதனால் கோட்டாநத்தம் கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், நேற்று அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை மறியல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

இதையடுத்து குஜிலியம்பாறை தாசில்தார் சிவசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன் (கி.ஊ), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் உடனடியாக சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story