தாறுமாறாக ஓடிய பஸ் மோதி டெம்போ கவிழ்ந்தது கியாஸ் சிலிண்டர்கள் உருண்டு ஓடியதால் பரபரப்பு


தாறுமாறாக ஓடிய பஸ் மோதி டெம்போ கவிழ்ந்தது கியாஸ் சிலிண்டர்கள் உருண்டு ஓடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 24 Sept 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே தாறுமாறாக ஓடிய பஸ் மோதி டெம்போ கவிழ்ந்தது. அதில் இருந்து கியாஸ் சிலிண்டர்கள் உருண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

களியக்காவிளை,

மார்த்தாண்டத்தில் இருந்து நேற்று காலை கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ஒரு டெம்போ களியக்காவிளை நோக்கி சென்று கொண்டிருந்தது. டெம்போவை புதுக்கடையை சேர்ந்த டல்லஸ் (வயது 37) என்பவர் ஓட்டிச் சென்றார்.

களியக்காவிளை அருகே திரித்துவபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பஸ் வந்தது. இந்தநிலையில் அரசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி டெம்போ மீது மோதியது.

சாலையில் உருண்ட சிலிண்டர்கள்

இந்த விபத்தில் டெம்போ சாலையில் கவிழ்ந்தது. அதே சமயத்தில், டெம்போவில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் சிதறி சாலையில் உருண்டு ஓடியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், விபத்து நடந்த சாலை நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் சாலையில் கிடந்த கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த டெம்போ டிரைவர் டல்லசை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான டெம்போவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தின் போது சாலையில் உருண்ட சிலிண்டர்கள் அதிர்ஷ்டவசமாக வெடிக்காததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.


Next Story