காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 24 Sept 2019 4:30 AM IST (Updated: 24 Sept 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைந்தது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நின்றதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8,700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஆனால், காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்றும் தொடர்ந்து நீடித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணை

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைந்துள்ள அதே நேரத்தில், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 812 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 97 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 8 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், நீர்வரத்தானது தண்ணீர் திறப்பை விட சற்று அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 119.94 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 119.95 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story