பிறந்து 4 மாதங்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி


பிறந்து 4 மாதங்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 9:31 PM GMT)

பிறந்து 4 மாதங்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த தாய் மண்எண்ணெய் ஊற்றி தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நடந்தது. இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கே.வி.குப்பம் சீதாராமபேட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கலா, அவருடைய மகள்கள் சியாமளா (வயது 29), வெண்ணிலா (26) ஆகியோர் கோரிக்கை மனு கொடுக்க வந்திருந்தனர்.

சியாமளாவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். அவருக்கு ஏற்கனவே நவீன்குமார் (5) என்ற மகனும், ஸ்ரீலட்சுமி (2) என்ற மகளும் உள்ளனர். அந்த குழந்தைகளுடன் சியாமளா வந்திருந்தார். அனைவரையும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.

இந்த நிலையில் திடீரென்று சியாமளா பாட்டிலில் மறைத்து எடுத்து வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றினார். அருகில் நின்ற அவருடைய தங்கை வெண்ணிலா மற்றும் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்துசெயல்பட்டு அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அவரிடம் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி விசாரணை நடத்தினார்.

வீட்டுமனை பிரச்சினை

அப்போது கலாவின் கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், மகள் சியாமளாவை சென்னையை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் முதல்திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது சியாமளாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் குழந்தைகளுடன் தாய்வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர்களுடைய வீட்டுப்பகுதியில் வசிக்கும் ஒருவர் இவர்களுடைய வீடு மற்றும் காலிமனையை அபகரிக்கும் நோக்குடன் இவர்களை மிரட்டிவருவதாகவும், வீட்டை எட்டி பார்ப்பதாகவும், இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ்நிலையம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டரிடம் மனுகொடுக்க வந்ததாகவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிக்க முடிவுசெய்ததாகவும் தெரிவித்தனர்.

பரபரப்பு

பின்னர் அவர்கள் மனுவாங்கும் இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுகொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story