மாநில உரிமைகளை அ.தி.மு.க.வால் பாதுகாக்க முடியவில்லை - கோவையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
மாநில உரிமைகளை அ.தி.மு.க.வால் பாதுகாக்க முடியவில்லை என்று கோவையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கோவை,
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் வருகிற 30-ந் தேதி கோவை காளப்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அந்த இடத்தை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மதியம் பார்வையிட்டார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜவஹர்லால் நேருவால் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதாகவும், நேரு போரை தொடர்ந்து நடத்தி இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது என்று அமித்ஷா பேசியிருப்பது அவருக்கு வரலாறு தெரியாது என்பது நிரூபணமாகிறது. அவர் தவறான தகவலை சொல்கிறார்.
மத்திய மந்திரி சபையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி பேச கூடாது. இதை இவர்கள் தெரிந்து சொல்கிறாரா? இல்லை தெரியாமல் சொல்கிறாரா? என்று தெரியவில்லை. காஷ்மீர் சரித்திரத்தை அமித்ஷா மாற்றி எழுத முயல்கிறார். சர்வாதிகாரிகள் வரலாற்றை மாற்றத்தான் முன் வருவார்கள்.
நேருவால்தான் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தது. ஜின்னாவின் வேண்டுகோளை ஏற்காமல் நேருவின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைந்து கொண்டனர். போர் நடந்த போது என்ன நடந்தது என்பது தொடர்பான, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்தும் அரசிடம் இருந்தும் கூட, அதை பார்க்காமல் உண்மைக்கு புறம்பாக, வரலாற்றுக்கு புறம்பாக எதை வேண்டுமானாலும் திரித்து பேசலாம் என்ற இழிவான நிலையில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பேசுகின்றனர். இதை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டிக்கிறேன்.
வருகிற இடைத்தேர்தல்களில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ ஆகியோர் பிரசாரம் மேற்கொள்வார்கள். வைகோ எந்த குற்றச்சாட்டையும் எங்கள் மீது கூறவில்லை. நாங்களும் வைகோ மீது எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. வைகோ சொன்ன கருத்திற்கு பதில் கருத்து மட்டுமே நான் சொன்னேன்.
நாங்கு நேரி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனு வாங்கப்பட்டு நாளை(புதன்கிழமை) மாலை நேர்காணல் நடத்தப்பட உள்ளது. அதில் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார். அந்த இடைத்தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர் குமரிஅனந்தன் விருப்ப மனு கொடுப்பதாக தெரிகிறது. அதை பரிசீலிக்க முடியாது என்று சொல்ல முடியாது.
தமிழகத்தில் ஆட்சி அ.தி.மு.க.விடம் இருந்தாலும் அவர்கள் தரத்துடன் இல்லை. எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தது இல்லை. ஆனால் அ.தி.மு.க. தனது உரிமைகளை பா.ஜனதாவிடம் விட்டுக்கொடுத்து விட்டது. இதற்கு உதாரணம் மத்திய அரசால் நீட் தேர்வு தீர்மானம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாக ஆட்சியாளர்கள் வெளியில் தெரிவிக்கவில்லை.
சொந்த உரிமைகளுக்கு கூட போராடாதவர்கள் அ.தி.மு.க.வினர். தலைமை செயலகத்தில் சி.பி.ஐ. வந்த போது வாய் மூடி மவுனமாக இருந்தார்கள். மேற்கு வங்காளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்ற போது அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மாநில உரிமைகளை பாதுகாக்க முடியாத அ.தி.மு.க.வினர் விஜய்க்கு பதில் சொல்வதை விட, அப்போது சி.பி.ஐ.க்கு பதில் சொல்லி இருக்க வேண்டும். அப்போது அமைதியாக இருந்திருக்க கூடாது.
அ.தி.மு.க.வை சீண்டினால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்பதற்காக நடிகர்கள் சீண்டுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
அ.தி.மு.க. கட்சி கேட்பாரற்று கிடக்கிறது. அவர்களை சீண்டினால் துர்நாற்றம் தான் வரும். அவர்களை சீண்டினால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்பதெல்லாம் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் அருள் தந்தைய்யா, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி, மாவட்ட தலைவர்கள் வி.எம்.சி.மனோகரன் (கோவை வடக்கு), எம்.பி.சக்திவேல் (கோவை தெற்கு), அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் பி.எஸ்.சரவணக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.சின்னையன் மற்றும் எச்.எம்.எஸ்.ராஜாமணி, ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் கோவை செல்வன் மற்றும் வீனஸ் மணி, கணபதி சிவக்குமார், சவுந்தரகுமார், வக்கீல் கருப்ப சாமி, நவீன்குமார், இருகூர் சுப்பிரமணியம், துளசிராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story