வால்பாறையில், ரேஷன் கடையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்


வால்பாறையில், ரேஷன் கடையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 24 Sept 2019 4:00 AM IST (Updated: 24 Sept 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் காட்டுயானைகள் ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தன.

வால்பாறை, 

கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியையொட்டி உள்ளதால் இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஹைபாரஸ்ட், பன்னிமேடு, சங்கிலிரோடு, தோனிமுடி ஆகிய எஸ்டேட் பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிகளுக்குள் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இதில் நான்கு குட்டிகள் உள்பட 12 யானைகள் கொண்ட கூட்டம் பன்னிமேடு சங்கிலிரோடு எஸ்டேட் பகுதிக்குள் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் புகுந்தன. பின்னர் காட்டுயானைகள் அங்குள்ள மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன் கடையின் சுவரை உடைத்து, ரேஷன் பொருட்களை தின்றும், கீழே கொட்டியும் நாசம் செய்தன. மேலும் அங்கிருந்த மேஜை, நாற்காலி, மண்எண்ணெய் பேரல்கள் தராசு உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தியது. பின்னர் அருகில் உள்ள மளிகை கடை, டீக்கடை மற்றும் வீடு ஆகியவற்றையும் காட்டுயானைகள் சேதப்படுத்தின.

இதையடுத்து யானை களின் சத்தம் கேட்டு எஸ்டேட் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களுடன் சேர்ந்து யானைகள் கூட்டத்தினை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதிகாலை காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையின் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் வாகனத்துடன் பல்வேறு பகுதியில் முகாமிட்டு யானை களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இருந்த போதும் போதிய வாகன வசதிகளும், கூடுதல் பணியாளர்களும் இல்லாததால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் அதிகளவில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. எனவே பன்னிமேடு, தோனிமுடி, சங்கிலிரோடு, முக்கோட்டுமுடி, நல்லமுடி, தாய்முடி ஆகிய எஸ்டேட் பகுதி மக்கள் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் கவனமாக இருக்கவேண்டும்.

இந்த நேரங்களில் பொதுமக்கள் யாரும் வீ்ட்டைவிட்டு வெளியேவர வேண்டாம். வேலைக்கு செல்பவர்கள் அந்த பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதா என்பதை அறிந்து பணிக்கு செல்ல வேண்டும். வனப்பகுதி வழியாக தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story