சர்ச்சை காட்சி இருப்பதாக கூறி நடிகர் விஜய் பட போஸ்டரை கிழித்து எறிந்த வியாபாரி - கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


சர்ச்சை காட்சி இருப்பதாக கூறி நடிகர் விஜய் பட போஸ்டரை கிழித்து எறிந்த வியாபாரி - கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Sept 2019 4:30 AM IST (Updated: 24 Sept 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

சர்ச்சை காட்சி இருப்பதா கூறி நடிகர் விஜய் பட போஸ்டரை கிழித்து எறிந்த வியாபாரியால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை உக்கடம் புதிய மீன்மார்க்கெட் பகுதியை சேர்ந்த இறைச்சி வியாபாரி கோபால் என்பவர் கையில் நடிகர் விஜய்யின் புதிய படமான பிகில் படத்தின் பஸ்ட்லுக் போஸ்டருடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் திடீரென்று நடிகர் விஜய் பட போஸ்டரை ஆக்ரோஷமாக கிழித்து எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்தனர்.

இதையடுத்து அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறி உள்ளதாவது:-

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில், மீன், கறிக்கோழி, ஆட்டு இறைச்சியை வெட்டும் கட்டை மற்றும் கத்தி மீது நடிகர் விஜய் செருப்பு அணிந்த கால் வைத்திருப்பது போன்று உள்ளது. இது இறைச்சி வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் நிர்வாகிகள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்த திண்பண்டங்களுடன் வந்து அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டை மற்றும் சாக்கடை வாய்க்கால்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் அதிக அளவில் தேங்கி உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கிறது. மேலும் ஆடு, மாடுகள் பிளாஸ்டிக் பைகளை உண்ணுவதால் இறக்கும் நிலை உள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் அளித்த மனுவில், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 151 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறோம். தற்போது தினக்கூலியாக பெண்களுக்கு ரூ.190-ம், ஆண்களுக்கு ரூ.230-ம் வழங்குகிறார்கள். எனவே தினக்கூலியை உயர்த்துவதோடு, முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story