திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் தீக்குளிக்க முயன்ற இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு


திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் தீக்குளிக்க முயன்ற இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Sept 2019 3:45 AM IST (Updated: 24 Sept 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் விரக்தியடைந்த இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்தனர். கடந்த சில வாரங்களாக கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களில் சிலர் மண்எண்ணெய், விஷம், பெட்ரோல் போன்றவற்றை கொண்டு வருவதும், தீக்குளிக்க முயற்சி செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

எனவே அது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நுழைவு வாயில் உள்பட கலெக்டர் அலுவலக வளாகம் வரை பொதுமக்கள் தீவிர சோதனை செய்த பின்னர் தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கலசபாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் திடீரென நுழைவு வாயில் அருகே உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்ததாகவும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாகவும், திருமண ஆசையை வளர்த்த அந்த வாலிபர் இப்போது திருமணத்துக்கு மறுப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே காதலன் திருமணத்துக்கு மறுத்த பிரச்சினை குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்ததாகவும் எனவே நீதி கிடைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பெண்ணை கலெக்டர் கந்தசாமியிடம் போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர் மனு அளித்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story