நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: தலைவர்கள் சிலையில் உள்ள சின்னம் - பெயர்கள் மறைப்பு


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: தலைவர்கள் சிலையில் உள்ள சின்னம் - பெயர்கள் மறைப்பு
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 24 Sept 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தலைவர்கள் சிலையில் உள்ள சின்னங்கள், பெயர் பலகைகள் மறைக்கப்பட்டன.

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் வருகிற அக்டோபர் மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் விளம்பரங்கள் மறைக்கப்பட வேண்டும். கொடிக்கம்பங்களில் உள்ள கட்சி கொடி வர்ணம் அல்லது கொடிக்கம்பத்தை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு மறைக்கப்படாத சின்னங்கள், பெயர்களை மறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நெல்லையில் நேற்று அரசு சார்ந்த கட்டிடங்கள், நினைவிடங்களில் உள்ள சின்னங்களை மறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் அவரது வலது கையில் இரட்டை விரல்களை உயர்த்தி காட்டுவது போன்று இருப்பதை துணியால் மூடி கட்டினர். மேலும் சிலையை சுற்றியும் உள்ள தடுப்பு கம்பியில் இருக்கும் இரட்டை இலை சின்னங்கள் துணியால் கட்டி மூடப்பட்டது.

இதே போல் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் ரோட்டை கடந்து செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலத்தின் மீது, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்த எம்.பி.யின் பெயர் பலகையும் துணியால் மறைக்கப்பட்டது. மேலும் நெல்லையில் உள்ள தலைவர்களின் சிலைகளை சுற்றி உள்ள அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்களை மூடி மறைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதே போல் பஸ்நிலையங்களில் அரசியல் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயர் பலகைகளும் மூடப்பட்டு வருகிறது. குறிப்பாக நாங்குநேரி தொகுதியில் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story