நெல்லை அருகே பயங்கரம்: பாலிடெக்னிக் மாணவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை


நெல்லை அருகே பயங்கரம்: பாலிடெக்னிக் மாணவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 23 Sep 2019 11:30 PM GMT (Updated: 23 Sep 2019 11:21 PM GMT)

நெல்லை அருகே மதிய சாப்பாட்டுக்கு கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பியபோது பாலிடெக்னிக் மாணவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சந்தையடியூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், வேன் டிரைவர். இவருடைய மனைவி பொன்ராணி. இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார்.

இவர்களுடைய மகன்கள் அபிமன்யு என்ற திலீப் (19), கண்ணன் (16), மகள் வளர்மதி (17). அபிமன்யு, நெல்லை அருகே செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள பள்ளியில் கண்ணன் பிளஸ்-1 வகுப்பும், வளர்மதி பிளஸ்-2 வகுப்பும் படித்து வருகின்றனர்.

நேற்று காலையில் அபிமன்யு வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர், மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதற்காக, தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சென்றபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வந்து வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அபிமன்யு தனது மோட்டார் சைக்கிளை திருப்பி கல்லூரிக்கு செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் அவரை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டினர்.

இதனால் அபிமன்யு மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தலைதெறிக்க ஓடினார். ஆனாலும், பாலிடெக்னிக் கல்லூரி அருகில் நாலுமுக்கு சந்து பகுதியில் மர்மநபர்கள் அபிமன்யுவை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலையில் பலத்த அரிவாள் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் உள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை பார்த்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கொலை செய்யப்பட்ட அபிமன்யுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சந்தையடியூரில் உள்ள கோவிலில் வரவு-செலவு கணக்கு கேட்டது தொடர்பாக, அபிமன்யுவின் தாத்தாவான ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் காளிதாசனுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த காமராஜ் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜை சிலர் அரிவாளால் வெட்டினர்.

இந்த வழக்கில் அபிமன்யு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அபிமன்யுவை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக தலைமறைவான காமராஜின் சகோதரர் குமார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கொலை செய்யப்பட்ட அபிமன்யுவின் உடலை பார்த்து அவருடைய குடும்பத்தினர், மாணவ-மாணவிகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. செய்துங்கநல்லூரில் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் மாணவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமும் நிலவுகிறது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story