தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் நியாயம் கிடைக்கும்; துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி


தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் நியாயம் கிடைக்கும்; துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
x
தினத்தந்தி 24 Sept 2019 4:55 AM IST (Updated: 24 Sept 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க் களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் நியாயம் கிடைக்கும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் மனு மீது இன்று (அதாவது நேற்று) விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்தால், தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து பா.ஜனதா மேலிடம் முடிவு எடுக்கும். சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும் முன்னரே எந்த கருத்தையும் கூற முடியாது.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக பா.ஜனதாவில் சேரவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். தீர்ப்பு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சி முடிவு செய்யும். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுவதால், நான் வேறு எந்த கருத்தையும் கூற முடியாது. அங்கு தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும். இடைத்தேர்தலை சந்திக்க பா.ஜனதா தீவிரமாக தயாராகி வருகிறது. 15 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

இந்த இடைத்தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். பச்சேகவுடா எம்.பி.யின் மகன் சரத் பச்சேகவுடா காங்கிரசில் சேருவது பற்றி எனக்கு தெரியாது. எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் விலகமாட்டார்கள்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார். 

Next Story