15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியீடு


15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியீடு
x
தினத்தந்தி 23 Sep 2019 11:35 PM GMT (Updated: 23 Sep 2019 11:35 PM GMT)

15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பாக ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

15 தொகுதிகளுக்கு நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தலில் நமது கட்சி தனித்து போட்டியிடுகிறது. இன்னும் 2 நாளில் நமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 15 தொகுதிகளையும் தீவிரமாக கருதி, தேர்தல் பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. 2 தேசிய கட்சிகளைவிட அதிக தொகுதிகளில் நமது கட்சி வெற்றி பெற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எனது பலத்தை மீறி உதவி செய்தேன். ஆனால் காங்கிரஸ் கட்சி நமக்கு சரியான முறையில் தேர்தல் பணியாற்றவில்லை. அதனால் இந்த முறை யாருடைய சகவாசமும் வேண்டாம். தனித்தே இடைத்தேர்தல் களத்தை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு காங்கிரசுடன் நமது கட்சி எந்த உறவையும் வைத்துக்கொள்ளவில்லை. இடைத்தேர்தலில் எங்கள் குடும்பத்தினர் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறானது. எங்கள் குடும்பத்தினர் யாரும் போட்டியிட மாட்டார்கள்.

தேவேகவுடா குடும்பத்தினர் இதுவரை அனுபவித்த வலி போதும். இனி வரும் தேர்தலிலும் எங்கள் குடும்பத்தினர் தேர்தலில் நிற்க மாட்டார்கள். இந்த இடைத்தேர்தலில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு டிக்கெட் வழங்கப்படும். சாமானிய தொண்டரை நிறுத்தி வெற்றி பெற வைப்போம்.

மண்டியா, துமகூரு, கோலார் உள்ளிட்ட தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் தோல்விக்கு சித்தராமையா காரணம். தேர்தலின்போது யார் என்ன செய்தனர் என்பது எனக்கு தெரியும். சித்தராமையா செய்த தவறே, மைசூருவில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம்.

இப்போது சித்தராமையா நாடகமாடுகிறார். பா.ஜனதாவின் வெற்றிக்கு காங்கிரசார் ஆதரவாக இருந்தனர். எங்களை குறை சொல்ல காங்கிரசாருக்கு வெட்கம் இல்லையா?. பா.ஜனதா ஆட்சியில் எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். காங்கிரசில் பதவிக்கு சண்டை போடுகிறார்கள்.

இவ்வாறு குமாரசாமி பேசினார். 

Next Story