கால்களில் நெருப்போடு நடுரோட்டில் ஓடிய சிறுவன்; வீடியோ வெளியாகி பரபரப்பு


கால்களில் நெருப்போடு நடுரோட்டில் ஓடிய சிறுவன்; வீடியோ வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 24 Sept 2019 5:18 AM IST (Updated: 24 Sept 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் சாலையோரத்தில் கிடந்த மின்வயரை மிதித்ததில் சிறுவனின் கால்களில் தீப்பிடித்து எரிந்தது. இதில் உதவிகேட்டு சிறுவன் நடுரோட்டில் அலறியபடி ஓடும் வீடியோ காட்சி சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத் தியது.

மும்பை,

நவிமும்பை கோபர்கைர்னே பகுதியில் உள்ள சாலையில் சம்பவத்தன்று சுபம் சோனி என்ற சிறுவன் நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது, சாலையோரத்தில் பூமிக்கடியில் செல்லும் மின்சார வயர் ஒன்று வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது. அதில் மின்கசிவு ஏற்பட்டு இருந்து உள்ளது.

அதை கவனிக்காமல் சென்ற சிறுவன் சுபம் சோனி, அதன் மீது மிதித்து விட்டான். அப்போது திடீரென குண்டு வெடித்தது போல் தீப்பிளம்பு உண்டானது.

இதில் சுபம் சோனியின் பேண்டில் தீப்பற்றிக் கொண்டது. அவனது 2 கால்களும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் வேதனை தாங்க முடியாமல் அலறினான். உயிரை காப்பாற்றிக் கொள்ள நெருப்புடன் சாலையில் உதவிகேட்டு ஓடினான். நல்லவேளையாக அங்கு ஒரு பிளாஸ்டிக் பேரலில் தண்ணீர் இருந்தது.

அந்த தண்ணீரை கோரி தனது உடலில் ஊற்றி தீயை அணைத்தான். இருப்பினும் இதில் சுபம் சோனி படுகாயம் அடைந்தான். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவனை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மின்சார வயரில் மிதித்த சுபம் சோனி மீது தீப்பிடிக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சி நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற் படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story