பா.ஜனதா அனைத்தையும் செய்து முடித்து விட்டது: இனி வாக்குப்பதிவு எந்திரத்தில் பொத்தானை அழுத்தினால் போதும் - சிவசேனா தாக்கு
பா.ஜனதா அனைத்தையும் செய்து முடித்து விட்டது. இனி நாம் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும் என்று சிவசேனா கடுமையாக தாக்கியுள்ளது.
மும்பை,
கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். பா.ஜனதாவுடன் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வரும் நிலையில் சிவசேனா பெயரை உச்சரிக்காமல் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் தனது அதிருப்தியை கிண்டலாக வெளிப்படுத்தி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தேவேந்திர பட்னாவிஸ் தேர்தலுக்குப் பிறகு மராட்டிய முதல்-மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என்று அமித்ஷா அறிவித்துவிட்டார். மேலும் பா.ஜனதா ஆட்சியில் முதலீடு, விவசாயம், கல்வி, தொழில்கள் மற்றும் சுகாதார துறைகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் சான்றிதழ் அளித்துள்ளார். எனவே, நமக்கு இப்போது மீதமுள்ள ஒரே நடைமுறை வெறுமனே வாக்குப்பதிவு எந்திரத்தில் சென்று பொத்தானை அழுத்துவது மட்டும்தான்.
காங்கிரஸ் கட்சி தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி போல உள்ளது. தேசியவாத காங்கிரஸ் நிலைத்து நிற்கவே கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story