மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் காஷ்மீர் குறித்து பேசுவதா? அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கண்டனம்


மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் காஷ்மீர் குறித்து பேசுவதா? அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 24 Sep 2019 12:16 AM GMT (Updated: 24 Sep 2019 12:16 AM GMT)

மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி மக்களை திசை திருப்புவதா? என்று அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பை வந்த பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவினை நீக்கிய விவகாரத்தில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து மராட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சவாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தேர்தல் மராட்டியத்தில் நடக்கிறது, ஜம்மு- காஷ்மீரில் இல்லை என்பதை நான் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு நினைவுபடுத்திக்கொள்கிறேன். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது பற்றி பேச விரும்பினால் அதற்கு அவர் ஜம்மு- காஷ்மீர் செல்லவேண்டும். தேர்தல் நடக்கும் மராட்டியத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி மக்களை திசைதிருப்பும் தந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டாம்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மராட்டியத்தின் கடன் இரட்டிப்பாகி உள்ளது. முந்தைய அரசின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, இந்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலைகள் 3 மடங்கு அதிகரித்துள்ளன. சிறு, குறு தொழில்கள் நசிவுறுவதால் வேலைவாய்ப்பின்மை பெருகிக்கொண்டே செல்கிறது.

ஜம்மு- காஷ்மீரில் பா.ஜனதா சில ஆண்டுகள் மெகபூபா முக்தியுடன் ஆட்சியில் அங்கம் வகித்தது. தற்போது அவரை ஏன் தடுப்பு காவலில் வைத்துள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

Next Story