திருச்செந்தூர் அருகே மண் அள்ள வந்த லாரி மோதி வாலிபர் பலி - பொதுமக்கள் சாலை மறியல்
திருச்செந்தூர் அருகே குளத்தில் கரம்பை மண் அள்ள வந்த லாரி மோதி வாலிபர் பலியானார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே சோனகன்விளை காணியாளன்புதூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி மாடத்தி. இவர்களது மகன் பாலசுந்தரம் (வயது 17), மகள் முத்துக்கனி (16). பாலசுந்தரம் ஐ.டி.ஐ. படித்து இருந்தார். முருகேசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
திருச்செந்தூர் அருகே நத்தக்குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக குளத்தில் உள்ள கரம்பை மண்ணை விவசாய பயன்பாட்டுக்காக லாரிகளில் எடுத்து செல்கின்றனர். அந்த லாரிகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்கும் பணியில் பாலசுந்தரம் ஈடுபட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு பாலசுந்தரம் நத்தக்குளத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கரம்பை மண் அள்ள வந்த லாரி எதிர்பாராதவிதமாக பாலசுந்தரத்தின் மீது மோதியது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லாரி மோதி இறந்த பாலசுந்தரத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான சாத்தான்குளம் அருகே செட்டிக்குளம் பஞ்சாயத்து கிருஷ்ணபேரியைச் சேர்ந்த முருகன் மகன் வள்ளிகுமாரை (29) கைது செய்தனர்.
இதற்கிடையே, லாரி மோதி இறந்த பாலசுந்தரத்தின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சோனகன்விளை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனார் திருச்செந்தூர்-நெல்லை மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
தகவல் அறிந்த திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், தாசில்தார் ஞானராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இறந்த பாலசுந்தரத்தின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க லாரி உரிமையாளர் சம்மதித்தார். மேலும், பாலசுந்தரத்தின் தாயாருக்கு விதவை உதவித்தொகை வழங்கவும் பரிந்துரைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குளத்தில் கரம்பை மண் அள்ள வந்த லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story