சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந் தேதி தொடங்குகிறது


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 Sept 2019 4:00 AM IST (Updated: 24 Sept 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

சமயபுரம்,

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குவது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசைக்கு மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராணம், தேவி மஹாத்மியம், முதலிய புராண கூற்றுகளின்படி அதர்மமான மகிஷாசூரனை அழிக்க ஊசிமுனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை என மும்மூன்று நாட்களாக ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்து 10-வது நாள் விஜயதசமியன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது இத்தலத்தின் மரபு.

அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. முதல் நாளான அன்று முதல் 1-ந் தேதி வரை முறையே அம்மன் குமாரிகா, திருமூர்த்தி, கல்யாணி ஆகிய அலங்காரத்திலும் (துர்க்கை அம்சத்திலும்), 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை முறையே ரோகிணி, காளகா, சண்டிகா ஆகிய அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சத்திலும்), 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை முறையே அம்மன் ஸாம்பவி, துர்கா, சுபத்ரா ஆகிய அலங்காரத்திலும் (சரஸ்வதி அம்சத்திலும்) பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

அம்புபோடும் நிகழ்ச்சி

10-ம் நாளான 8-ந் தேதி விஜயதசமி அன்று வேடுபரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அன்று இரவு 7.30 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னிமரம் சென்றடைந்து அங்கு அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உற்சவத்தின்போது தினமும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு புறப்பாடாகி கோவில் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து இரவு 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடை பெறுகிறது.

ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை பரதநாட்டியம், கலைநிகழ்ச்சி மற்றும் ஆன்மிக சொற் பொழிவு நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், மேலாளர் லெட்சுமணன், மணியக்காரர் ரமணி மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

Next Story