காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - கலெக்டர் கதிரவன் தகவல்


காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2019 11:00 PM GMT (Updated: 24 Sep 2019 6:42 PM GMT)

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

மேட்டூர் அணையில் இருந்து நேற்று மதியம் வினாடிக்கு 27 ஆயிரத்து 900 கனஅடி வீதம் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் காவிரிக்கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறிஇருப்பதாவது:-

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து இன்று (அதாவது நேற்று) இரவு காவிரி ஆற்றில் 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே காவிரி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், சுற்றுலா பயணிகளின் உள்பட அனைவரும் நீரில் இறங்கி குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, புகைப்படங்கள் எடுக்கவோ கூடாது. மேலும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் தண்டோரா, ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியுள்ளார்.

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு அம்மாபேட்டை பேரூராட்சி, வருவாய் மற்றும் போலீஸ் துறை சார்பில் அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவே கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி மற்றும் போலீசார், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story