அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் இருந்த மின்விசிறி உடைந்து விழுந்ததில் மாணவி படுகாயம்


அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் இருந்த மின்விசிறி உடைந்து விழுந்ததில் மாணவி படுகாயம்
x
தினத்தந்தி 25 Sept 2019 4:45 AM IST (Updated: 25 Sept 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் இருந்த மின்விசிறி உடைந்து விழுந்ததில் பள்ளி மாணவி படுகாயம் அடைந்ததையடுத்து மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 45). இவருக்கு நாகரத்தினம்(39) என்பவருடன் திருமணமாகி யுவராஜ்(20) என்ற மகனும், சத்யா(15) என்ற மகளும் உள்ளனர். பாஸ்கர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சத்யா திருமானூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடந்து வந்ததால் சம்பவத்தன்று சத்யாவிற்கு அறிவியல் தேர்வு நடந்துள்ளது.

அப்போது மதியம் 3 மணி அளவில் வகுப்பறையில் மேஜைக்கு ஒருவர் என மாணவ- மாணவிகள் அமர்த்தப்பட்டு தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது வகுப்பறையில் இருந்த மின்விசிறி உடைந்து மாணவி சத்யாவின் மீது விழுந்துள்ளது. இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்து ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து அவரது வீட்டில் சென்று விட்டுள்ளனர்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியர் சார்பிலும் மாணவியின் நலம் குறித்து எந்த ஒரு விசாரிப்பும் கேட்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் சக மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கண்டனம்

சம்பவம் குறித்து விசாரிக்கையில் மாணவி தேர்வு எழுதிய கட்டிடத்தில் உள்ள அனைத்து மின்விசிறிகளுமே பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு பெரும் சத்தத்துடன் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மின்விசிறி விழுந்த நேரம் தேர்வு நேரம் என்பதால் ஒரு மாணவி மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுவே வகுப்பு நேரங்களில் விழுந்திருந்தால் பல மாணவ- மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.

இதனால் உடனடியாக மற்ற வகுப்பறைகளில் உள்ள மின்விசிறிகளையும் சரி செய்ய வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை குறித்து எந்தவித அக்கறையும் காட்டாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் பொதுமக்களும் பெற்றோர்களும் பெரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


Next Story