கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பரிதாபமாக பலியானாள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கோவை,
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை நாராயணன் காலனி பகுதியை சேர்ந்தவர் மன்சூர் அலி. இவருடைய மனைவி சர்மிளா. இந்த தம்பதிக்கு ரம்ஜான் பாத்திமா (வயது 5) என்ற மகள் இருந்தாள். இந்த சிறுமிக்கு கடந்த 18-ந் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து சிறுமியை அங்குள்ள டாக்டர்கள் 19-ந் தேதி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு பல்வேறு கட்ட சோதனைகள் செய்யப்பட்டன. அதில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சிறுமிக்கு காய்ச்சல் குறையாததால், மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 12.05 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டாள்.
அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும்போது அந்த சிறுமிக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு இருந்தது. இதனால் உடனடியாக குழந்தைகள் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி சிறுமி ரம்ஜான் பாத்திமா பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களின் கண்களை கலங்கச்செய்தது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அத்துடன் வைரஸ் காய்ச்சலுக்கு உள்நோயாளிகளாக 25 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2 நாட்களில் வைரஸ் காய்ச்சலுக்கு 141 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story