வேட்பு மனு தாக்கல் செய்ய தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு தடை இல்லை; கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு


வேட்பு மனு தாக்கல் செய்ய தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு தடை இல்லை; கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Sept 2019 5:45 AM IST (Updated: 25 Sept 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தடை இல்லை என்று கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் அறிவித்து உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

இந்த நிலையில் காங் கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அந்த கட்சிகள் பிறப்பித்த கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபா நாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.

தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த 17 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் காலியாக இருக்கும் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. இதுபற்றி நிருபர்களை சந்தித்த கர்நாடக மாநில தேர்தல் அதிகாரி “சபாநாயகர் தீர்ப்பின் அடிப்படையில் பார்க்கும்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட முடியாது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தகுதி நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது அங்கு ஆஜராகி இருந்த தேர்தல் ஆணையத்தின் வக்கீல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இடைத் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று கூறினார். இதற்கு காங் கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று(புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் “தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதில் தடை எதுவும் இல்லை” என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட முடியாது என்று நான் கூறியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. நான் அவ்வாறு கூறவில்லை.

இந்த விஷயம் கோர்ட்டில் உள்ளது. தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது கோர்ட்டு விசாரணையில் இருக்கும்போது, நான் எந்த கருத்தையும் கூற முடியாது. ஆனால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் உள்பட யார் வேண்டுமானாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சட்டப்படி முடிவு எடுப்பார்.”

இவ்வாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறினார். 


Next Story