நான் முதல்-மந்திரி ஆனாலே எனக்கு அக்னி பரீட்சை தான் - எடியூரப்பா பேட்டி
நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் போது எல்லாம் மாநிலம் மழை அல்லது வறட்சியால் பாதிக்கப்படுகிறது என்றும், நான் முதல்-மந்திரி ஆனாலே எனக்கு அக்னி பரீட்சை தான் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் கொட்டி தீர்த்த கனமழையால் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை, வெள்ளத்திற்கு 80 பேர் உயிரிழந்தனர். 7 லட்சம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் மழைவிட்டு 50 நாட்களுக்கு மேல் ஆகியும் கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்டு பெற முடியாத எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் போது எல்லாம் கர்நாடகம் மழை அல்லது வறட்சியால் பாதிக்கப்படுகிறது. நான் முதல்-மந்திரி ஆனாலே எனக்கு கடும் அக்னி பரீட்சை தான். கடந்த 108 முதல் 110 ஆண்டுகளில் இல்லாத வெள்ள பாதிப்பை கர்நாடகம் கண்டு உள்ளது. மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்ட மாநில அரசு உதவி வருகிறது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்த போதிலும் சித்ரதுர்கா உள்பட சில மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நான் வறட்சி மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை சமாளித்து வருகிறேன்.
கர்நாடகத்தில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு மழை, வெள்ளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்று உள்ளனர். இன்னும் 4 அல்லது 5 நாட்களில் வெள்ள நிவாரண பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
முந்தைய கூட்டணி அரசு விவசாயிகளின் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்து உள்ளது. அதை தொடர்ந்து செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2008-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது வடகர்நாடகம் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story