கரூர் இரட்டைக்கொலை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு எவ்வளவு? சட்டப்பணிகள் ஆணைக்குழு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கரூர் இரட்டைக்கொலை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு எவ்வளவு? சட்டப்பணிகள் ஆணைக்குழு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Sept 2019 4:30 AM IST (Updated: 25 Sept 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

கரூர் இரட்டைக்கொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு எவ்வளவு வழங்குவது என்பது குறித்து கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 60). விவசாயி. இவரது மகன் நல்லதம்பி (42). இவர்களுக்கு கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்வதற்காக அந்த நிலத்தின் அருகில் வீடு கட்டி, அங்கேயே இவர்கள் வசித்தனர். முதலைப்பட்டியில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்தது தொடர்பாக அவர்களுக்கும், வீரமலைக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் வீரமலை, நல்லதம்பியை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த இரட்டைக்கொலை விவகாரத்தை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது. குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடும் கண்டனத்தையும் தெரிவித்தது. ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு வக்கீல் ஆஜராகி, “கொலையுண்ட குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கொலை வழக்கு விசாரணை விரைவாக நடந்து வருகிறது” என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கொலையுண்டவரின் 12 வயது மகன் பொன்னார், சோமரசம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தான் கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்பதால், தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லவில்லை. எனவே இதே தனியார் பள்ளி நிர்வாகத்தின்கீழ் சேலத்திலும் ஒரு பள்ளி செயல்படுகிறது. அந்த பள்ளியில் பொன்னாரை சேர்த்து படிக்க வைப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பதில் அளிக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி சாட்சிகள் பாதுகாப்புத்திட்டத்தின்படி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய சாட்சிகளை விசாரிக்கும் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இதை நடைமுறைப்படுத்தியது குறித்து தமிழகத்தின் உள்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும்.

தந்தையும், மகனும் கொலையுண்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு எவ்வளவு வழங்குவது குறித்து கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். முதலைப்பட்டி குளம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் கோவிலில் சமீபத்தில் கட்டப்பட்ட பகுதிகளை கிராமத்தினரே அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story