நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்? சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்


நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்? சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்
x
தினத்தந்தி 25 Sept 2019 5:15 AM IST (Updated: 25 Sept 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்பது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு அமைந்தது. குமாரசாமி 14 மாதங்கள் முதல்-மந்திரியாக பணியாற்றினார். கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. கூட்டணி அரசு கவிழ, சித்தராமையாவே காரணம் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்று முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவில் நிகில் குமாரசாமி, துமகூருவில் தேவேகவுடா, கோலாரில் கே.எச்.முனியப்பா ஆகியோரின் தோல்விக்கு சித்தராமையாவே காரணம் என்று குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு உப்பள்ளியில் நேற்று பதிலளித்துள்ள சித்தராமையா, “குமாரசாமி அறிவுடன் பேசுவது இல்லை. நாடாளுமன்ற தேர்தலின்போது மைசூரு, சாம்ராஜ்நகர் தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஓட்டுகளை பா.ஜனதாவுக்கு அளிக்குமாறு மந்திரியாக இருந்த ஜி.டி.தேவேகவுடாவுக்கு குமாரசாமி அறிவுறுத்தினார். இப்போது இடைத்தேர்தல் வந்துள்ளதால் குமாரசாமி நாடகமாடுகிறார்“ என்றார்.

மேலும் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “40 ஆண்டுகள் அனுபவம் இருந்தும், நான் கழுகை, கிளி என்று நம்பி அதனுடன் கூட்டு சேர்ந்தேன். இது எனது தவறு. இது முரண்பாடானது இல்லையா?. அனுபவத்தை விட பெரிய பாடம் என்ன இருக்கிறது?“ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள குமாரசாமி சென்னப்பட்டணாவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “சித்தராமையாவின் தயவில் நான் முதல்-மந்திரியாக ஆகவில்லை. காங்கிரஸ் மேலிடம் வழங்கிய ஆதரவால் முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தேன். காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவை சித்தராமையாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இல்லாவிட்டால் இந்த அரசு கவிழ்ந்திருக்காது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரு வினாடி கூட குமாரசாமி அரசு நீடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் சித்தராமையா கூறினார்.

தற்போது காங்கிரசில் இருக்கும் தலைவர்கள் சிலர் தேவேகவுடாவால் வளர்ந்தவர்கள். ஆனால் அவர்களே தேவேகவுடாவை அரசியல் ரீதியாக அழித்தனர். கூட்டணி அரசு கவிழ காரணம் என்ன?. என்ன நடந்தது என்று எனக்கு தெரியாதா?. நான் சித்தராமையாவால் வளர்க்கப்பட்ட கிளி அல்ல. ராமநகர் மக்கள் என்னை வளர்த்தனர். அவர்களால் தான் நான் அரசியலில் இந்த நிலைக்கு வளர்ந்துள்ளேன்“ என்றார்.


Next Story