தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை; மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பா.ஜனதா
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையின் முடிவை அறிய கர்நாடக மாநில பா.ஜனதா மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. 14 மாதங்கள் இந்த ஆட்சி நீடித்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு பா.ஜனதா தலைமையில் புதிய அரசு அமைந்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக பணியாற்றி வருகிறார்.
அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 2023-ம் ஆண்டு வரை அவர்கள் சபையின் உறுப்பினராக தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீது நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி, சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சபாநாயகர் அலுவலகம் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. இந்த நிலையில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்குமா? என்பது குறித்தும், விசாரணையின் முடிவை அறியவும் கர்நாடக மாநில பா.ஜனதா மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 பேரும் பா.ஜனதா சார்பில் போட்டியிட உள்ளனர். ஒருவேளை அனுமதி கிடைக்காவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story