பட்டப்பகலில் வெடிகுண்டு வீசி தாக்குதல்: காங்கிரஸ் பிரமுகர் கொலையில் 3 பேர் கோர்ட்டில் சரண்; ஜோசப் மகன் உள்பட மேலும் பலருக்கு வலைவீச்சு


பட்டப்பகலில் வெடிகுண்டு வீசி தாக்குதல்: காங்கிரஸ் பிரமுகர் கொலையில் 3 பேர் கோர்ட்டில் சரண்; ஜோசப் மகன் உள்பட மேலும் பலருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Sept 2019 5:30 AM IST (Updated: 25 Sept 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

பழிக்குப்பழியாக வெடிகுண்டு வீசி காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் புதுவை கோர்ட்டில் சரணடைந்தனர். ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ஜோசப்பின் மகன் உள்பட மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோசப் கடந்த ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டார். தொழில்போட்டி காரணமாக நடந்த இந்த கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் உள்பட 15 பேரை ஆரோவில் போலீசார் அப்போது கைது செய்தனர்.

தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். சந்திரசேகர் ஊருக்குள் நுழைய புதுச்சேரி போலீசார் தடை விதித்திருந்ததால் அவர் தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள மஞ்சகுப்பத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் ஜோசப் கொலையில் தொடர்புடைய நண்பரின் மனைவி இறந்து போனதையொட்டி அதில் பங்கேற்க சந்திரசேகர் விரும்பினார். இதற்காக தனது மனைவி சுமலதாவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் ஏதோ விசாரிப்பது போல் நடித்து திடீரென வெடிகுண்டை வீசியது. இதை எதிர்பார்க்காத சந்திரசேகரும், அவரது மனைவியும் நிலை குலைந்து கீழே விழுந்தனர். உடனே அந்த ஆசாமிகள் சரமாரியாக சந்திரசேகரை வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினர்.

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது கண் முன்பே கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை பார்த்து சுமலதா அதிர்ச்சி அடைந்தார். அவரது புகாரின்பேரில் காலாப்பட்டு போலீசார் சுகன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஜோசப்பின் மகன் டேனியல், சரவணன், கோதண்டன், லட்சுமணன், சரவணன், ருத்திரன் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

போலீஸ் விசாரணையில் ஜோசப் கொலைக்கு பழி வாங்கவே இந்த கொலை சம்பவம் நடந்து இருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் காலாப்பட்டு குப்பத்தை சேர்ந்த சுகன், கணுவாப்பேட்டை அப்துல் நசீர், மேட்டுப்பாளையம் ரங்கராஜ் ஆகியோர் புதுவை கோர்ட்டில் நீதிபதி பிரீத்தி முன்பு நேற்று சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காலாப்பட்டு போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜோசப்பின் மகன் உள்பட மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story