கோவை அருகே, இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி கைது


கோவை அருகே, இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி கைது
x
தினத்தந்தி 25 Sept 2019 3:45 AM IST (Updated: 25 Sept 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவையை அடுத்த நெகமம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது32). இவரது மனைவி ராஜேஸ்வரி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து விபசார தொழிலுக்கு பெண்களை ஈடுபடுத்துவது வழக்கமாக இருந்துள்ளது. மனைவி ராஜேஸ்வரி வீட்டில் இருந்து கொள்வாராம். செல்வராஜ், அந்த பகுதியில் உள்ள பஸ் நிலையம், டாஸ்மாக் கடைகள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று அங்கு புதிதாக வருகின்ற நபர்களிடம் பேச்சுகொடுப்பாராம். அப்போது அவர்கள் பெண் சபலம் உள்ளவர் என்று அறிந்ததும் அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்து, தன்னிடம் அழகான பெண்கள் உள்ளனர். நீங்கள் விரும்பினால் வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவாராம்.

வீட்டுக்கு வருகின்ற நபரை ராஜேஸ்வரி உறவினர்போல் வரவேற்று, அங்குள்ள குறி்ப்பிட்ட பெண்ணை காட்டி குறிப்பிட்ட தொகை பேசி வாங்கிக்கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுத்துவது வாடிக்கையாக இருந்து உள்ளது. சம்பவத்தன்று செல்வராஜ் அங்குள்ள பஸ் நிலைய பகுதிக்கு அருகே சென்று அங்கு புதிதாக வந்த ஒரு நபரிடம், உல்லாசமாக இருக்க என்னிடம் பெண்கள் உள்ளனர்.

என்னுடன் வந்தால் அழைத்து செல்கிறேன், ஜாலியாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறியுள்ளார். அதனை கேட்ட அந்த நபர், அந்த பெண் இருக்கும் இடம், எவ்வளவு பணம் வேண்டும் என்கிற விவரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்னர் அவர், நீங்கள் போங்கள் நான் சிறிது நேரம் கழித்து அங்கு வந்து விடுகிறேன் என்று கூறி உள்ளார். இதனால் செல்வராஜூம், கண்டிப்பாக அந்த நபர் வந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் வேறு ஒரு நபரை குறிவைத்து அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில் அந்த நபர், செல்வராஜ் கூறிய வீடு, விபசார தொழில் நடப்பது குறித்து நெகமம் போலீஸ் நிலையத்திற்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். உடனே நெகமம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று செல்வராஜ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு புளியம்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இருந்தது தெரியவந்தது.

அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, செல்வராஜ் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் சேர்ந்து பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நெகமம் போலீசார் கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கு விபசார தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணை மீட்டு கோவை சங்கனூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story