கர்நாடகத்தில் புதிய அரசியல் நாடகங்கள் அரங்கேறும்; குமாரசாமி கணிப்பு
சட்டசபை இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடகத்தில் புதிய அரசியல் நாடகம் அரங்கேறும் என்று குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் ஜனதா தளம்(எஸ்) சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். தனித்து போட்டியிடுவது என்று எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது. 2 நாட்களில் வேட்பாளர்களை முடிவு செய்து அறிவிப்போம். இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் இலக்கு. கட்சியை பலப்படுத்தவும், மக்களின் நம்பிக்கையை பெறவும் நாங்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளோம்.
இந்த இடைத்தேர்தல் மாநிலத்தில் ஆட்சி நடத்துபவர்களுக்கும், அனைத்துக்கட்சிகளுக்கும் ஒரு அக்னி பரீட்சை. அக்டோபர் 24-ந் தேதி இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு, கர்நாடகத்தில் எந்தவிதமான புதிய அரசியல் நாடகங்கள் அரங்கேறப்போகிறது என்பதை பார்க்கலாம். இடைத்தேர்தல் நிச்சயம் நடைபெறும். வெற்றிக்கு தேவையான வியூகத்தை நாங்கள் வகுப்போம். 15 தொகுதிகளிலும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story