மண்ணச்சநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்


மண்ணச்சநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 25 Sept 2019 3:45 AM IST (Updated: 25 Sept 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில், கணவர் கண் முன்னே பெண் பரிதாபமாக இறந்தார்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் மேலவாரித்தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவர் சோடா கம்பெனி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலெட்சுமி (வயது 47). நேற்று தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மனோகரன் தனது மனைவியுடன் திருச்சிக்கு சென்றார். பின்னர் மதியம் வீட்டிற்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மனோகரன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, தனலெட்சுமி பின்னால் அமர்ந்திருந்தார். திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சியம் அருகே உள்ள புதுப்பாலத்தில் வந்தபோது, சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துறையூருக்கு சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த தனலெட்சுமி மீது பஸ் சக்கரம் ஏறியது. இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனோகரன் காயமின்றி உயிர் தப்பினார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் அங்கு வந்து தனலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி கணவன் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய பஸ் தமிழக அரசியலில் உயர் பதவியில் இருக்கும் முக்கிய நபருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. 

Next Story