கட்டிட தொழிலாளர் நல நிதியை விடுவிக்க மறுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி பணி இடமாற்றம்


கட்டிட தொழிலாளர் நல நிதியை விடுவிக்க மறுத்த  ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 25 Sept 2019 4:30 AM IST (Updated: 25 Sept 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட தொழிலாளர் நல நிதியை விடுவிக்க மறுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியை பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் தற்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி ஹாசன் மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். அப்போது அந்த மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்த மஞ்சுவுக்கும், கலெக்டர் ரோகிணி சிந்தூரிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. சில விஷயங்களில் மந்திரியின் பேச்சுக்கு அவர் மதிப்பு கொடுக்கவில்லை என்று அப்போது காரணம் கூறப்பட்டது.

இதையடுத்து ரோகிணி சிந்தூரி பணி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அந்த பணி இடமாற்றத்திற்கு எதிராக கோர்ட்டில் ரோகிணி சிந்தூரி வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு அமைந்தது. அதன் பிறகு ஹாசன் மாவட்ட கலெக்டராக மீண்டும் ரோகிணி சிந்தூரி நியமிக்கப்பட்டார். இதனால் கோர்ட்டில் நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் குமாரசாமி ஆட்சியில் ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரியாக எச்.டி.ரேவண்ணா செயல்பட்டார். கலெக்டர், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு சாதகமாக செயல்படவில்லை என நிர்வாகிகள் புகார் கூறியதை அடுத்து ரோகிணி சிந்தூரி மீண்டும் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். கர்நாடக அரசு கட்டிட தொழிலாளர் நல வாரிய செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, அரசு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தங்களின் மொத்த மதிப்பீட்டில் இருந்து 1 சதவீதத்தை கர்நாடக அரசின் கட்டிட தொழிலாளர் நல வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த வாரியத்தில் தற்போது ரூ.8,000 கோடி நிதி உள்ளது. இந்த நிதி கட்டிட தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும் என்பது விதிமுறை.

மேலும் அந்த துறையில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘கியோனிக்ஸ்‘ நிறுவனத்திற்கு வழங்கும்படி ரோகிணி சிந்தூரிக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் வந்ததாகவும், ஆனால் முறைப்படி டெண்டர் அழைக்கப்பட்டு தகுதியான நிறுவனத்திற்கு தான் பணி ஒதுக்கப்படும் என்று ரோகிணி சிந்தூரி திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தொழிலாளர் நல நிதியில் இருந்து ஒரு பகுதி, அதாவது ரூ.3,000 கோடியை வெள்ள நிவாரண பணிகளுக்கு வழங்குமாறு மாநில அரசிடம் இருந்து அழுத்தம் வந்ததாகவும், அதை ரோகிணி சிந்தூரி நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூருவில் 100 இடங்களில் தொழிலாளர் நல வாரியம் மூலம் கட்டுமான தொழிலாளர்களின் வசதிக்காக நடமாடும் குழந்தைகள் காப்பகம் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தநிலையில் ரோகிணி சிந்தூரியை திடீரென பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எந்த பணியையும் ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அடிப்படையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவருமான ரோகிணி சிந்தூரி, 2009-ம் ஆண்டு கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். அவருக்கு தற்போது 35 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story