நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்
நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக தேர்தல் மன்னன் பத்மராஜன் நேற்று மனு தாக்கல் செய்தார்.
நாங்குநேரி,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. பலரும் வேட்புமனுக்களை அதிகாரிகளிடம் இருந்து வாங்கிச்சென்றனர்.
2-வது நாளான நேற்று யாரேனும் வேட்புமனு தாக்கல் செய்தால், அதனை பெறுவதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரி நடேசன் மற்றும் அலுவலர்கள் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்தனர். மதியம் 12 மணி அளவில் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் அங்கு வந்தார். அவர் நாங்குநேரி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக கூறி தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நடேசனிடம் தாக்கல் செய்தார்.
பின்னர் பத்மராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் ஹோமியோபதி டாக்டர், டயர் பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வருகிறேன். இந்தியா முழுவதும் நான் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். இதற்கு முன்பு 205 தேர்தல்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளேன். தற்போது நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 206-வது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளேன்.
நான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு தேர்தல்களில் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2 நாட்களில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட பத்மராஜன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். 1-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 3-ந்தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
Related Tags :
Next Story