கம்மாபுரம் பகுதியில் கனமழை: என்.எல்.சி. சுரங்க நீருடன் அடித்து வரப்பட்ட மண்ணால் நெற்பயிர்கள் நாசம் - விவசாயிகள் கவலை


கம்மாபுரம் பகுதியில் கனமழை: என்.எல்.சி. சுரங்க நீருடன் அடித்து வரப்பட்ட மண்ணால் நெற்பயிர்கள் நாசம் - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 25 Sept 2019 3:45 AM IST (Updated: 25 Sept 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

கம்மாபுரம் பகுதியில் பெய்த கனமழையால் என்.எல்.சி. சுரங்க நீருடன் அடித்து வரப்பட்ட மண்ணால் நெற்பயிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், கொம்பாடிக்குப்பம், பொன்னாலகரம், ஊ.மங்கலம், கொளப்பாக்கம், அரசக்குழி, ஊத்தாங்கால், கோபாலபுரம், சு.கீணனூர் ஆகிய பகுதிகளையொட்டி என்.எல்.சி.யின் 2-வது நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் மண், அந்த பகுதியில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. விளை நிலம் முழுவதையும் சுரங்க மண் ஆக்கிரமித்துக்கொள்வதால் விவசாய பணிகள் பதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கம்மாபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் கன மழை பெய்தது. இதனால் சுரங்கத்தில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீருடன் சுரங்க மண்ணும் அடித்து செல்லப்பட்டு சு.கீணனூர், கொம்பாடிக்குப்பம் பகுதியில் உள்ள விளை நிலத்திற்குள் புகுந்தது.

இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சம்பா நெல் நடவு பணியை விவசாயிகள் மேற்கொண்டு இருந்தனர். இவை அனைத்தும் என்.எல்.சி. மண்ணால் தற்போது மூடப்பட்டு பயிர்கள் முழுவதும் நாசமாகி விட்டன. இதனால் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

இதுபற்றி அறிந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசு சேதமான விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம், ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று என்.எல்.சி. மண் எங்களது விளை நிலத்துக்குள் தண்ணீரில் அடித்து வரப்படுகிறது. எனவே நிலத்தில் பயிர் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி வருகிறோம்.

தற்போது நிலத்தில் படிந்தள்ள மண்ணை அகற்றினால் தான் நாங்கள் அடுத்த கட்டமாக வேளாண் பணியை மேற்கொள்ள முடியும். ஆனால் இதற்கு அதிகசெலவு ஆகும். ஏற்கனவே நெற்பயிர்கள் மூழ்கியதால் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறோம். நிலத்தில் மழைநீர் தேங்கி நின்றால் கூட எங்களால் வடிய வைக்க முடியும். ஆனால் தண்ணீருடன் மணலும் அடித்து வரப்பட்டு பயிருக்கு மேல் பரவிகிடக்கிறது. இந்த நிலையில் மண்ணை எங்களால் எப்படி அகற்ற முடியும். எனவே என்.எல்.சி. நிர்வாகமே இதை அகற்றி தர வேண்டும். மேலும் இதுபோன்று இனி வரும் காலங்களில் நிகழாமல் தடுக்கும் வகையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இவர்களது கோரிக்கைகள் தொடர்பாக செல்போன் மூலம் என்.எல்.சி. அதிகாரியை தொடர்பு கொண்டு பேசிய தாசில்தார் கவியரசு, இது தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் தெரிவித்தார். 

Next Story