சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரம்: பா.ஜனதா வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்


சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரம்: பா.ஜனதா வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Sept 2019 5:50 AM IST (Updated: 25 Sept 2019 5:50 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் பா.ஜனதா தனது வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மும்பை, 

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்துள்ள எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இதேபோல ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளின் கூட்டணியும் உறுதியானது. ஆனால் இந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இரு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே சட்டமன்ற தேர்தலுக்கான உடன்பாட்டையும் செய்ததாக சிவசேனா கூறுகிறது. அதன்படி இரண்டு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுவது மற்றும் முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா சொல்கிறது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் தங்களது கட்சிக்கு செல்வாக்கு கூடியிருப்பதாக பா.ஜனதா கருதுகிறது. இதனால் சட்டசபை தேர்தலில் சிவசேனாவுக்கு தன்னை விட குறைந்த தொகுதிகளை ஒதுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்த பரபரப்பான நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பை வந்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா, தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, சிவசேனாவின் பெயரை ஒரு இடத்திலும் கூட உச்சரிக்காமல் பிரசாரம் செய்தது சர்ச்சையை கிளப்பியது.

இதற்கிடையே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் தொகுதி பங்கீட்டை அறிவிக்க நேற்று கூட்டாக நிருபர்களை சந்திக்க இருப்பதாக நேற்று முன்தினம் இரவு பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். அடுத்த சில மணி நேரத்தில் இதை சிவசேனா மறுத்தது. பா.ஜனதாவும் தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கியது. இதனால் கூட்டணி முறியுமா? நீடிக்குமா? என்ற பரபரப்பு நிலவுகிறது.

இதுகுறித்து நேற்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டிய மாநிலம், மன்னர் சத்ரபதி சிவாஜியின் மண். இங்கு வாக்குறுதி முக்கியம். நாங்கள் வாஜ்பாய், அத்வானி, பிரமோத் மகாஜன் போன்ற பா.ஜனதா தலைவர்களுடன் பணியாற்றி உள்ளோம். அவர்கள் எப்போதும் வாக்குறுதிக்கு மரியாதை கொடுப்பவர்கள்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பார்முலா ஏற்கனவே பா.ஜனதாவுடன் முடிந்து விட்டது. ஆனால் பா.ஜனதாவால் வாக்குறுதிக்கு மரியாதை அளிக்க முடியாவிட்டால், அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கூட்டணி விஷயத்தில் எங்களது கட்சி எப்போதும் சாதகமான மனநிலையில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story