சத்தாரா நாடாளுமன்ற தொகுதிக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு


சத்தாரா நாடாளுமன்ற தொகுதிக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Sept 2019 5:54 AM IST (Updated: 25 Sept 2019 5:54 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சத்தாரா நாடாளுமன்ற தொகுதிக்கு மராட்டிய சட்டசபை தேர்தலுடன் அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் சத்தாராவில் தேசியவாத காங்கிரசின் சக்தி வாய்ந்த தலைவராக விளங்கியவர் உதயன்ராஜே போஸ்லே. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வம்சாவளியான இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் உள்பட தொடர்ச்சியாக மூன்று முறை தேசியவாத காங்கிரஸ் சார்பில் சத்தாரா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்.

இந்த நிலையில், மராட்டிய சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனாவுக்கு கட்சி தாவி வருகின்றனர்.

அவர்கள் வரிசையில் உதயன்ராஜே போஸ்லேவும் பா.ஜனதாவில் இணைந்தார்.

இதற்காக கடந்த 14-ந் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய உதயன்ராஜே போஸ்லே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

உதயன்ராஜே போஸ்லே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, சத்தாரா தொகுதி காலியானது.

இந்த நிலையில், சத்தாரா நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என நேற்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அன்று தான் 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. சத்தாரா நாடாளுமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்குகள் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபர் 24-ந் தேதி அன்றே எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உதயன்ராஜே போஸ்லே பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்தபோது, தனது சத்தாரா நாடாளுமன்ற தொகுதிக்கும் மராட்டிய சட்டமன்ற தேர்தலுடன் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவை வலியுறுத்தினார். ஆனால் சமீபத்தில் சட்டசபை தேர்தல் தேதி வெளியானபோது சத்தாரா நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாததால் அவர் ஏமாற்றம் அடைந்த நிலையில், தற்போது அந்த தொகுதிக்கு சட்டசபை தேர்தலுடன் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சத்தாரா நாடாளுமன்ற தொகுதியில் பதவியை ராஜினாமா செய்த உதயன்ராஜே போஸ்லே நடைபெற உள்ள இடைத் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Next Story