அ.தி.மு.க. தொண்டர் கொலையில் 3 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி சிக்கினார் - அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


அ.தி.மு.க. தொண்டர் கொலையில் 3 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி சிக்கினார் - அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Sep 2019 10:45 PM GMT (Updated: 25 Sep 2019 12:34 AM GMT)

சுரண்டை அருகே அ.தி.மு.க. தொண்டர் கொலையில் 3 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி சிக்கினார். இக்கொலையில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சுரண்டை, 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் என்ற ஜோசப் (வயது45). இவர் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பொய்கையில் வசித்து வந்தார். அ.தி.மு.க. தொண்டர். இவருக்கும், இவரது உறவினரான பொய்கையை சேர்ந்த அ.ம.மு.க. நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மாரியப்பனுக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 15.6.16-ந் தேதி அச்சம்பட்டி கிராமம் அருகிலுள்ள அம்பட்ட ஊரணியிலுள்ள கல்வெட்டான் குழியில் முத்துராமலிங்கம் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அரியநாயகிபுரம் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிபின்ராஜ் வழக்குப்பதிவு செய்து, முத்துராமலிங்கம் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கில் கொலையாளிகள் பற்றிய விவரம் தெரியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், கடைய நல்லூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமலாபுரம் விலக்கு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கரடிகுளம் காளியம்மன் கோவில் தெரு மாடசாமித்தேவர் மகன் ராமர்பாண்டியன் என்ற ராமரை(40) போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடந்த 2016-ம் ஆண்டு அ.ம.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தூண்டுதல் பேரில் பொய்கையை சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடேஷ், கரடிகுளம் வேல்தேவர் மகன் செண்பகராஜ் ஆகியோருடன் சேர்ந்து முத்துராமலிங்கத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இந்த வழக்கில் அ.ம.மு.க. மேற்குமாவட்ட செயலாளர் மாரியப்பன், செண்பகராஜ், வேல்ராஜ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு பின் முத்துராமலிங்கம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராமர்பாண்டியனை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Next Story