வானவில் : மோட்டரோலா டி.வி.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஒவ்வொன்றாக இப்போது டி.வி. தயாரிப்பில் இறங்கியுள்ளன.
ஒன் பிளஸ் நிறுவனம் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு டி.வி.யை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக மோட்டரோலா நிறுவனம் வருகிற 29-ம் தேதி பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ள ‘பிக் பில்லியன் டே’ விற்பனையின்போதே தனது டி.வி.யையும் அறிமுகப்படுத்துகிறது.
இந்திய வாடிக்கையாளர்களின் மனோ நிலையை நன்கு அறிந்துள்ள மோட்டரோலா நிறுவனம் குறைந்த விலையில் தரமான தயாரிப்புகளை தந்து வாடிக்கையாளர்களை மேலும் கவர திட்டமிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இந்நிறுவன ஸ்மார்ட் டி.வி.க்களின் விலை ரூ.13,999-ல் தொடங்குகிறது.
32 அங்குலம் முதல் 65 அங்குலம் வரையிலான டி.வி.க்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. ஹெச்.டி. முதல் 4 கே ரெசல்யூஷன் கொண்ட மாடல்களாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. மோட்டரோலா நிறுவனத்தின் டி.வி.க்களில் முன்பக்கத்தில் துல்லியமான ஒலியை சிறப்பாக வழங்கும் வகையில் ஸ்பீக்கர் வைக்கப்பட்டுள்ளது. இவை 30 வாட் இசையை வெளிப்படுத்தும். இவை டி.வி. திரைக்கு வலதுபுறத்தில் உள்ளது. 32 அங்குல டி.வி. 720 பிக்சர் ரெசல்யூஷன் கொண்டது. இதன் விலை ரூ.13,999.
இதற்கடுத்த மாடலான 43 அங்குல டி.வி. புல் ஹெச்.டி.யும் 1080 பிக்சர் ரெசல்யூஷனும் கொண்டது. இதன் விலை ரூ.24,999. இதில் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் 2160 பிக்சர் ரெசல்யூஷனைக் கொண்டது. இதன் விலை ரூ.29,999. இதற்கடுத்து 50 அங்குலத்தில் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் 2160 பிக்சர் ரெசல்யூஷனோடு வந்துள்ளது. இதன் விலை ரூ.33,999.
இதைத் தொடர்ந்து 55 அங்குலத்தில் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் 2160 பிக்சர் ரெசல்யூஷனோடு வந்துள்ளது. இதன் விலை ரூ.39,999. பிரீமியம் மாடல் 65 அங்குலத்தில் அல்ட்ரா ஹெச்.டி. வசதியோடு 2160 பிக்சர் ரெசல்யூஷனைக் கொண்டதாக ரூ.64,999 விலையில் வந்துள்ளது. இந்த டி.வி.யில் கூடுதல் அம்சமாக கேம்பேட் தரப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளதால் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து விளையாடலாம். ஒன் பிளஸ் நிறுவனம் அமேசான் தளத்தில் பண்டிகைக் காலத்தில் தனது டி.வி.யை அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே மோட்டரோலா இந்திய வீடுகளை அலங்கரிக்கும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story